பயணம் செய்யும் பொது விழிப்புணர்வோடு இருங்கள்

சில்மிஷ கண்டக்டருக்கு செருப்படி கொடுத்த மாணவி


கடலூர் : அரசு ஏர் பஸ்சி்ல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டருக்கு மாணவி ஒருவர் செருப்படி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கண்டக்டருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ரபீக். புதுச்சேரியில் கடை நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன், காயல்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு, பக்கத்து வீட்டு முதியவர்களுடன் ரபீக் தனது மகள் நூர்ஜகானை(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருச்செங்கோட்டிலிருந்து புதுச்சேரி செல்லும் அரசு சொகுசு பஸ்சில் அனுப்பி வைத்தார். நூர்ஜகான், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

பஸ் தொழுதூர் அருகே வந்தபோது, திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் முருகேசன் (34), கண்டக்டரான செஞ்சியை சேர்ந்த ராஜாவிடம், பஸ்சை ஓட்டும்படி கூறி விட்டு, கண்டக்டர் பணியில் ஈடுபட்டார். நூர்ஜகான் அருகே அமர்ந்த முருகேசன், தூங்கி கொண்டிருந்த அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த நூர்ஜகான், புதுச்சேரியில் உள்ள உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மொபைல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனே, அவர்கள் கார் மூலம் கடலூருக்கு வந்தனர். நேற்று காலை பஸ் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்ததும், நூர்ஜகான் முருகேசனை செருப்பால் அடித்தார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் முருகேசனுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். முருகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் சில்மிஷம் செய்த கண்டக்டருக்கு மாணவி ஒருவர் செருப்படி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர்