திருவாரூர் மத்திய பல்கலை செப்.,ல் திறப்பு துணைவேந்தர் அறிவிப்பு
திருவாரூர்: ""திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் திறக்கப்படும்,'' என துணைவேந்தர் சஞ்சை கூறினார்.
திருவாரூரில் மத்திய பல்கலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதற்கட்டமாக செயல்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு பகுதியை தற்காலிகமாக பெற்று மத்திய பல்கலை செயல்படுத்த பணிகள் துவங்கினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள அலுவலகங்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்டிடத்தின் சாவிகளை கலெக்டர் சந்திரசேகரன், மத்திய பல்கலை துணைவேந்தர் சஞ்சையிடம் ஒப்படைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணை வேந்தர் சஞ்சை கூறியதாவது: தேசிய அளவில் 12 இடங்களில் மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்படுகிறது. அவை அனைத்தும் முற்றிலும் கிராமப்பகுதியில் செயல்படுகிறது. கிராம முன்னேற்றம், ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய பல்கலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருவாரூரில் மத்திய பல்கலை பணிகள் துவங்க ஏதுவாக முதற்கட்டமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவிர, திருவாரூர் அடுத்த வண்டாம்பாளை அடுத்த நிலக்குடி கிராமத்தில் பல்கலை பெரிய அளவில் அமைப்பதற்காக 528 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு முறையாக பல்கலை அமைக்கப்படும். முன்னதாக செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் இப்பல்கலை துவக்க விழா நடக்கும். அதில், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தேதியும், பங்கேற்போர் விபரமும் பின்னர் அறிவிக்கப்படும்.
ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். முதற்கட்டமாக நான்கு பாடப்பிரிவுகளில் எட்டு வகுப்பு துவங்கும். ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 30 மாணவ, மாணவிகள் இருப்பார்கள். இங்கு இளங்கலை, முதுகலை, பி.எச்டி., வரையிலான அனைத்து கல்வியையும் பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்படும். பெண்களுக்கு தனியாக விடுதி அமைத்துக் கொடுக்கப்படும். உலகத்தரத்துடன் இணைய தள இணைப்பு, இ.லைப்ரரி வசதி கொண்ட நூலகம் அமைக்கப்படும். முழுமையான பல்கலையாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர் 08.08.2009
நமதூர் +2 முடித்த மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு
Posted by Koothanallur Emirates Organisation at 12:13 AMLabels: கல்வி செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக