முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு: மிஸ்ரா கமிஷன் பரிந்துரை
புது தில்லி, டிச.18: மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும், மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடும் வழங்கலாம் என முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரை அளித்துள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்தார்.முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு 2004-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. பரிந்துரை அம்சங்கள்: மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடத்தை அளிக்க வேண்டும். இதர மதவாரி மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீட்டை அளிக்கவேண்டும். அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளை அட்டவணைப் பட்டியலில் (ஷெட்யூல்டு காஸ்ட்) சேர்க்க வேண்டும்.குறிப் பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அல்லது ஏதாவது ஒரு பணிக்கு முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், அந்த பின்னடைவு இடங்களை மற்ற சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக முஸ்லிம்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில் பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கைகள் பலவற்றை இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது. கமிஷனில் கருத்து வேறுபாடு: அதேவேளையில் இந்த கமிஷனின் உறுப்பினர் செயலர் ஆஷா தாஸ், கமிஷனின் பரிந்துரைகளில் மாறுபட்டு சில பரிந்துரைகளை அளித்துள்ளார். அதில், மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்.சி.க்களுக்கான சலுகைகள் வழங்கக்கூடாது. இதர பிற்பட்டோர் பிரிவினருக்குரிய சலுகைகள் வேண்டுமானால் வழங்கலாம். மதம் மாறிய தலித்துககளுக்கு முந்தைய சலுகைகள் வேண்டும் என்பதை நியாயப்படுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் வரவேற்பு: மிக வும் நுட்பமாக ஆய்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வரவேற்கத்தக்கவை. இருப்பினும், இதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தி நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி. மதமாற்றத்தை ஊக்குவிக்கும்-பாஜக கருத்து: நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள், மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. மேலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும். இந்த பரிந்துரை நாட்டுக்கு பயனற்றது என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி.
DINAMANI First Published : 19 Dec 2009 01:51:45 AM IST
0 comments:
கருத்துரையிடுக