தனிமனிதரின் செயல் எவ்வாறு பேரழிவில் இருந்து காக்க உதவும்?

Pollution&GlobalWarmingபல தனி மனிதர்கள் ஒன்றிணைந்தால் உருவாவது சமுதாயம். சமுதாயம் பெரிய அளவில் விரிவடைந்து நாடாகிறது. ஆகையால் தனி மனிதர் ஒவ்வொருவரின் செயல்பாடும் பேரழிவில் இருந்து காப்பாற்ற உதவும் தூண்டுகோலாகவே அமையும். ஆகையால் நச்சுவாயுவை பூமியில் கலக்காமல் இருக்கும் வகையில் தனிமனிதராகிய நாமும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவில் வெளியிடும் எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்றவற்றை எவ்வகையில் தங்கள் பயன்பாட்டில் இருந்து குறைக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு குறைக்க வேண்டும்.

உதாரணத்துக்கு எளிதில் நடந்து வரக்கூடிய தூரத்துக்கு எல்லாம் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். கூடிய வரை அனைவரின் பயணத்துக்கு உதவியாக இருக்கும் வகையில் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கலாம். நான்கு சக்கர வாகனத்தை அலுவலகம் செல்லவோ அல்லது இதர விஷயங்களுக்கு பயன்படுத்தும் போது, தனிநபர் ஒருவர் மட்டும் பயணிக்காமல் தனது சகாக்களையும் அழைத்துச் செல்லலாம்.

நகரங்களில் மக்கள் வசிக்கவே இடமில்லாமல மரம் நிழல் அருகி மாபெரும் கட்டிடங்கள் வளர்ந்து நிற்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் கிராமங்கள் மரம் வளர்க்கும் சூழ்நிலை மாறாமல் தான் இருக்கிறது. இதனால் கிராம பகுதிகள் உள்ள மரங்களை அழிக்காமல் புதியதாக மரங்களை வளர்க்க உதவியாக இருக்கலாம்.

அண்மையில் அனைவரையும் பாதித்த மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக இருந்தது மின்சார பற்றாக்குறை. நாளுக்கு நாள் மின்சாரத்தின் பயன்பாடு கூடி குளிர்சாதன பொருத்தப்படாமல் வாழ முடியாத சூழ்நிலைக்கு மாறி இருக்கிறோம். உண்மையில் ஏராளமான நிலக்கரி எரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் மின்சாரம் தயாரிக்கப்படும் போது ஏராளமான நச்சு வாயுக்கள் காற்றில் கலக்கப்படுகிறது. இதனால் மின்சார உற்பத்தி கூடகூட காற்றில் கலக்கும் கார்பன்டை ஆக்ஸைடு அளவும் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் நாம் எவ்வளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு காற்றில் கலக்கப்படும் நச்சு வாயுக்களின் அளவு குறைக்கப்பட்டு பேரழிவில் இருந்து காக்கவும் முடியும்.

தேவையில்லாத பொருட்களை எந்தளவுக்கு மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை தேவையில்லை என்று தூக்கி வீசுறும் போது மண்வளம் பாதிப்படைவதோடு மட்டுமில்லாமல் பொருட்களின் புது உற்பத்தியை தூண்டும் வகையில் அமைகிறது. புது உற்பத்தி மின்தேவையும், எரிபொருள் தேவையையும் அதிகப்படுத்துகிறது. இதனால் முடிந்த வரை பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு முயல வேண்டும்.

நண்பர்களுடன், உறவினர்களுடன் பேசும் போது, காலநிலை மாற்றங்களை பற்றியும் பேசுங்கள். அவர்களும் காலநிலை மாற்ற சமநிலை படுத்தும் செயல்பாடுகளில் ஈடுப்பட வாய்ப்பு இருக்கிறது. உலகம் அழிவதும், காப்பதும் நமது கைகளில் தான் இருக்கிறது.

குறிப்பு: http://www.infoog.com/weblogs/pollution_globalwarming.html