இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்துவர தடை:
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முற்றுகை
கூத்தாநல்லூர், செப்.4-
கூத்தாநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்துவர தடைவிதிக்கப்பட்டதால் பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இதில் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணியக்கூடாது என்று பேசியதாகவும், இதை தவறு என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியர் கருணாநிதிக்கும், இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
சாலைமறியல்
இந்த நிலையில் தலைமை ஆசிரியரை திட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமையில் நேற்றுமுன்தினம் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு பர்தா அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு வெளியே நிற்க வைத்துள்ளோம், வந்து அழைத்து செல்லுங்கள் என்று தொலைபேசி மூலம் தலைமை ஆசிரியர் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
முற்றுகை போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு பர்தா அணிந்த மாணவிகள் பள்ளிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து மாணவிகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, பர்தா அணிந்து இருந்ததால், பள்ளிக்கூட வாசலுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
பள்ளி முன்பு மாணவிகளின் பெற்றோர் கோஷம் எழுப்பியதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி உதவி கலெக்டர் ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா, நீடாமங்கலம் தாசில்தார் காளேஸ்வரன், கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி, நகரசபை தலைவர் ஜெயராஜ், துணைத்தலைவர் முகமதுஅஷ்ரப் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதில் தலைமை ஆசிரியர் கருணாநிதி இஸ்லாமிய மாணவிகளை பர்தா அணியக்கூடாது என்று கூறியது தெரியவந்தது.
கலெக்டர் நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணியக்கூடாது என்று கூறியது பள்ளி தலைமை ஆசிரியரின் தன்னிச்சையான முடிவு என்பது தெரியவந்துள்ளது. மாணவிகள் பர்தா அணிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி . தினத்தந்தி, 04.09.2013
0 comments:
கருத்துரையிடுக