சொட்டு மருந்து கொடுத்த குழந்தைகள் மயக்கம்

கோவை: போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள்,அரசு சுகாதார மையங்கள் ரயில் நிலையங்கள்,பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. முகாமை சென்னை கோபாலபுரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை துவக்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.


போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக ஏற்பட்ட புரளியால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புரளியால் பீதியடைந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல துவங்கினர். இதனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அருகே உள்ள பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை; இவரது மகன் சங்கரன்(4). சங்கரனுக்கு இதயக்கோளாறு காரணமாக ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் சங்கரனுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் போலியோ சொட்டு மருந்து முகாம்களை முற்றுகையிட்டனர்.இது தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவமனையையும் பொதுமக்கள் தாக்கி உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இந்த புரளி காரணமாக கோவை கலேக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ‌செய்தியாளர்கள் சந்திப்பில் கலெக்டர் கூறியதாவது: பொதுமக்கள் இந்த புரளியை நம்ப வேண்டாம்; இந்த புரளி பரப்பப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை; அவர்கள் யார் என கண்டுபிடித்து,புரளியை பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் மயக்கம் அடைந்திருப்பதாக ஏற்பட்ட புரளியை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர்