வேண்டுகோள் !

முதலாவது... ஆண்பிள்ளைகளின் கல்வி.
இன்று நமதூரில் ஏராளமான பெண்பிள்ளைகள் சாதாரணமாக கல்லூரிகல்வி வரையிலும் செல்லும் வாய்ப்புகளும், ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு அவர்களும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் பட்டங்கள் வரை பெற்று வருகின்றனர். ஆனால் ஆண்பிள்ளைகளின் கல்வி என்னாயிற்று?யோசித்துப் பாருங்கள்... சமஅளவிலாவது உள்ளதா? இல்லை அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுக்கப்பட்டதா? இவற்றால் நமதூரில் ஏற்படுகின்ற மனரீதியிலான மாறுதல்களை இன்று நம் கண்முன்னே கண்டு கொண்டிருக்கின்றோம். எனவே ஆண்பிள்ளைகளின் கல்லூரி கல்விக்கான முயற்சியை முன்னெடுத்து செல்வது இன்று நம்சமூகம் வளர்த்த அவசியம்.

இரண்டாவது... இளைஞர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்குமான இடைவெளி களைதல்
நமதூர் (20-30 வரையிலான) இளைஞர்களை அவர்களுடைய சமூக பொறுப்புகள் குறித்து நட்பு ரீதியில் வழிகாட்டத் தவறிய ஊர் பெரியவர்கள். இதனை சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளிலும், ஊர் நிர்வாக தேர்தலுக்கான ஏற்பாட்டுக் கூட்டங்களிலும் இளைஞர்களின் குறைந்த வருகை உணர்த்தியது.
காரணம்... அவர்களுடைய கருத்துக்களை கேட்க பெரியவர்களின் காதுகளுக்கு பற்றாக்குறை தான்.
இளைஞர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்குமான இடைவெளியை குறைத்து வருங்காலத்தில் நமதூரை ஆளப்போகின்ற அவர்களுடைய கருத்துக்களையும், சிந்தனை மாறுதல்களையும் அறிய... இளைஞர் அணியை ஏற்படுத்தி அரவணைத்துச் சென்று வழிகாட்டுவது இன்று நம்சமூகத்திற்கு மிகவும் அவசியம்.

மூன்றாவது... கடமைகள், பொறுப்புகள் உணர்ந்த குடும்ப கட்டமைப்பு
கணவன் மனைவிக்குமான கடமைகள்,பொறுப்புகள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். ஊர் பழக்க வழக்கங்களுக்கும் மேலாக நமது இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் போதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் மூலமோ சகோதரர்கள் மூலமோ அதனை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் உணர்த்தப்பட வேண்டும். அதற்காக நமது ஊர் நிர்வாக அமைப்பு முதலில் சிறு சிறு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக கல்யாணமான ஆண்-பெண் நீங்கள் கூறுங்கள்... உங்களது திருமணத்தின் போது நீங்கள் உறுதிமொழியளித்து கையெழுத்திட்ட திருமண ஒப்பந்தத்தை முழுவதுமாக படித்து பார்க்க உங்களிடம் யாரும் சொன்னார்களா? அதற்கான போதிய அவகாசம் கொடுக்கப்பட்டதா?அதற்கான முக்கியத்துவம் நம்மில் உணரப்பட்டதா?
எனது வேண்டுகோள் என்னவெனில்,திருமணத்திற்கு முன்னர் இருவீட்டார்களின் சார்பில் கோரப்படும் ஊர் உத்தரவுடன்,இஸ்லாம் போதிக்கும் மணவாழ்க்கைகான கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த உறுதிமொழி பத்திரம் போதிய அவகாசத்தில் கொடுக்கப்பட்டு, படித்து பார்த்து பின்னர் மணமகன் மற்றும் மணமகளின் முழு சம்மதத்துடன் உறுதிமொழி கையெழுத்து பெறப்பட்ட பின்னரே திருமணத்திற்கான உத்தரவை ஊர் நிர்வாகம் வழங்க வேண்டும். அதற்கான அவசியம் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.
இம்மூன்று கோரிக்கைகளும் எனது தனிப்பட்ட வேண்டுகோளாக, சமூகம் குறித்து கவலைப்படும் வெளிநாடு வாழ் நமதூர் உள்ளங்களின் ஏக்கங்களாக உங்கள் KEOஅமைப்பின் கூட்டுப் பரிந்துரையுடன் பல கை ஓசையாக ஒலிக்க விரும்புகிறேன். அனைத்து நல் முயற்சிகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்...
வஸ்ஸலாம்.

செய்யது நாசர் M.A.(Journalism & Mass Communication), PGDCA
Editor/http://www.koothanallur.co.in/
சவூதி அரேபியா
Mobile: +966 56 77 34 971