இஸ்லாமும் – நவீன யுகமும்
இனிதே ரமலானும் அதன் பாக்கியம் நிறைந்த வழிபாடுகளும் ஏற்படுத்திய இறை சிந்தனைமிகு உணர்வுகள், இன்றும் நம்மில் தொடர்ந்து இருக்கட்டுமாக என்ற பிரார்த்தனையோடு எழுத ஆரம்பிக்கிறேன்.மனித அறிவுத் தேடலின் வெளிப்பாடுகள் தான் இன்றைய பிரமிக்க வைக்கும் உலகம். நவீனமும் அதன் கண்டுபிடிப்புகளும் இல்லாத வாழ்க்கை ஆதி மனிதனின் நிர்வாணமான இருண்ட காலத்தை நமக்கு நினைவு படுத்துகிறது.

தனி மனிதனின் வாழ்க்கை மட்டும் அல்ல, ஒரு சமூக முன்னேற்றத்திற்கும் அதன் வாழ்க்கைத் தர உயர்விற்கும் நவீனத்துவம் மிகுந்த வாழ்க்கை அவசியமானது. இது யாராலும் மறுதலிக்க முடியாத உண்மை.
இப்படி நவீனத்துவமான அனைத்தையும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் வழியாக சிந்திக்கின்ற நேரத்தில், அறிவியலும் அதன் வெளிப்பாடுகளும் குர்ஆனிலும், ஹதீஸிலும் அப்போதே சொல்லப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.
காரணம், அறிவியலும் அதன் கண்டுபிடிப் புகளும் ஒரு சில நூற்றாண்டுகளின் சமீபத்திய நிகழ்வுகள். குர்ஆனின் வருகை 1400 ஆண்டுகளை கடந்தது. இறை வேதமான திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முந்தைய காலம் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ என்று அழைக்கப்படுகிறது. இதன்பொருள் ‘மடமையும் அறிவீனமும் நிரம்பிய இருண்ட காலம்’ என்பதாகும்.உண்மை தான். காரணம் ஆன்மிகத்தையும், மனித வாழ்வின் அனைத்து நிலைகள் பற்றியும் விரிவாக குர்ஆனும், நபிமொழியும் கற்றுத்தருவதோடு நம் யதார்த்த வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இறை வணக்கமாக மாற்றுகிறது.
குர்ஆன் மனித மரபணு குறித்து விவரிக்கிறது. மனித விந்து துளியில் தொடங்கி தாயின் கருவறையில் ஒன்பது மாத கால நிகழ்வுகள் என மிகத் தெளிவாக பேசுகின்றது. ‘மனிதனை நாம் திட்டமாக களிமண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில் (கருவறை) மனிதனை விந்தாக நாம் ஆக்கினோம். பிறகு அந்த விந்தை ரத்தக் கட்டியாகப் படைத்தோம். பிறகு அந்த ரத்தக் கட்டியைச் சதைத் துண்டாகப் படைத்தோம். பிறகு அந்த சதைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பிறகு அவ்வெலும்புகளுக்குச் சதையை அணிவித்தோம். அப்புறம் அவனை வேறாரு படைப்பாக உண்டாக்கினோம்’. (23: 12–14)
ஒட்டகையை – அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கவனிக்க வேண்டாமா? (89:17) என்பதில் உயிரியல் குறித்தும், வானத்தை – அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது (89:18) என்பதில் வானவியல் குறித்தும், மலைகளை – அது எவ்வாறு நட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், பூமியை – அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? (89:19–20) என்பதில் புவியியல் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.
இப்படி இஸ்லாத்தின் அறிவியலுக்கு தனியொரு ஆய்வகமோ, பலகோடி மதிப்பிலான கருவிகளோ, விஞ்ஞானிகள் குழுவோ ஆய்வின் அடிப்படைக்கும் அதன் ஆரம்பித்திற்கும் தேவையற்றது. மாற்றமாக குர்ஆனை, நபிமொழியை இறைசிந்தனையோடு விளங்கி சிந்தித்து இன்றைய யுகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒவ்வொருவனும் விஞ்ஞானியாக மாறுகிறான்.
குர்ஆன் சொல்லும் சிறிய வரலாறு இது. குழப்பம் செய்யும் யண்ஜூஜ், மண்ஜூஜ் கூட்டத்தினரை விட்டு தங்களை தற்காத்துக் கொள்ள, அவர்கள் ஊருக்குள் வராமல் இருக்க இருமலைகளுக்கிடையில் அணை போன்று ஒரு தடுப்பை கட்டிட துல்கர்னைன் (அலை) அவர்களிடத்தில் குறிப்பிட்டத் தொகையை அவ்வூர் மக்கள் கொடுத்தார்கள். துல்கர்னைன் (அலை) இரும்பாலான அணையை எப்படி கட்டினார்கள் என்ற வரலாற்றை இறைவன் சொல்கிறான்.
‘இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள் (என்றார், அது கொண்டு வரப்பட்டு) இரு மலைக்கிடையில் (உச்சி வரை) சமமான பொழுது, ‘அதனை நெருப்பாக ஆக்கும் வரை ஊதுங்கள்’ எனக் கூறினார். (பின்னர் செம்பை உருக்கி) என்னிடம் கொண்டு வாருங்கள். (அந்த) உருக்கிய செம்பை அதன் மீது நான் ஊற்றுகிறேன் என்றும் துல்கர்னைன் (அலை) அவர்கள் கூறினார்கள்’.இந்த நிகழ்வில் குர்ஆன், இரும்புப்பாலத்தால் அணைக்கட்டுகின்ற முறையைச் சொல்வதில் பொறியியல் குறித்தும், செம்பை உருக்கி கொண்டு வாருங்கள் என்பதில் வேதியியல் குறித்தும் குர்ஆன் சொல்கிறது.
நபி ஆதம் (அலை) என்கிற ஒரு ஆணின் விலா எலும்பிலிருந்து நேரடியாக ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் படைத்ததும், கணவன் அன்றி இறை நியதியின் பிரகாரம் ஹஜ்ரத் மர்யம் (அலை) அவர்கள் கருவுற்றதும், ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் பிறந்ததும் இன்றைய நவீன மரபணு அறிவியலான குளோனிங் முறைக்கு சவாலாகத் தானே இருக்கிறது.
இரு கைகளின் மூலமாகத் தான் அதிக நோய்கள் உருவாகிறது. எனவே கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று இன்றைய நவீன மருத்துவம் சொல்கிறது. அத்தோடு கை சுத்தத்தை வலியுறுத்தி உலக கை கழுவும் நாள் என ஐ.நா சபையால் அக்டோபர் 15–ம் நாள் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.
அதிகாலை எழுந்தவுடன் உங்கள் கைகளை நீரால் சுத்தப்படுத்தி விட்டு உங்கள் வேலையை தொடங்குங்கள் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
தினமும் காலையிலும், இரவில் தூங்க செல்லும் முன் பல்துலக்குவது ஆரோக்கியமானது என நம் மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஐ வேளைத் தொழுகைக்கான உளுவின் போது (மிஸ்வாக்) பல் துலக்குங்கள் என்ற நாயகத்தின் சுன்னத்தான வழிமுறை ஆரோக்கியத்தை கற்றுத் தரும் விதத்தில் இன்றைய நவீன மருத்துவத்தை மிஞ்சிநிற்கிறது.
இப்படி இன்றைய உலகம் விடைதேடும் அனைத்திற்குமான சங்கமம் நம் கையில் இருக்கிற குர்ஆனும், ஹதீஸூம் தான்.
அறிவியல் வளர்ச்சியின் விளைவு நமக்கு நம் அண்டை வீடுகளை அயல்நாடாக்கியது, அயல்நாடுகளை அண்டைவீடாக்கியது என்றான் ஒரு கவிஞன்.
அழிச்சாட்டியம் செய்து வரம்பு மீறி மாறு செய்து நடந்த ஒரு ஊரை அழித்து விடவேண்டும் என முடிவு செய்தான் இறைவன். ஆனால், அந்த ஊரின் பள்ளிவாசலில் ஒரு குழந்தை தன் மழலை மொழியால் குர்ஆனின் முதல் ஆயத்தான ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என ஓதுவதை கேட்ட இறைவன், அந்த குழந்தைக்காகவும், அது ஓதுகின்ற குர்ஆனுக்காகவும் அந்த ஊரை 40 ஆண்டுகள் அழிக்காமல் விட்டு விட்டான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
இப்படி இறை தண்டனைகளில் ஒன்றான உலகத்தின் எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றை முன்கூட்டி அறிய பல கருவிகளை இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடித்திருந்தாலும் கூட, இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை தடுக்கவும் அதிலிருந்து முழு பாதுகாப்பு பெறவும் இன்றளவும் முடியவில்லை என்பதே உண்மை.
ஆனால் குர்ஆனாலும், அதை ஓதுகின்ற ஒரு சிறு குழந்தையாலும் நிச்சயம் இறை தண்டனைகளை தடுக்க முடியும் என்பதை மேற்சொன்ன நாயகம் (ஸல்) அவர்கள் நபிமொழி நிரூபித்து காட்டுகிறது.
மவுலவி மை.அ.முஹம்மது லுத்புல்லாஹ் பிலாலி, பள்ளப்பட்டி.
நன்றி : தினத்தந்தி ---- 17.08.2013.
0 comments:
கருத்துரையிடுக